மதுரை: தொகுதி மறுவரைவு (டெலிமிடேஷன்) மசோதா சட்டமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது திமுக வெளிநடப்பு செய்யக்கூடும் என்ற தகவல் இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மசோதாவுக்கு திமுக ஆதரவா, எதிர்ப்பா, அல்லது வெளிநடப்பா என்பதில் எதைத் தேர்வு செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். வெளிநடப்பு செய்தால் அது மசோதாவுக்கு மறைமுக ஆதரவாகவே பொருள்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், மசோதாவுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்வதாக திமுக ஏற்கனவே உறுதி அளித்ததாக தகவல் வருவதாக கூறிய அமைச்சர், திமுக தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; இல்லையெனில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைத்துக் கட்சி கூட்டம் தேவையான நேரத்தில் முதல்வர் விஜய் கூட்டுவார் என்றும், காவிரி விவகாரத்தில் அனைவருக்கும் தெளிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முடிவு எடுக்க வேண்டியது தெளிவாக இருக்கும் போது அனைத்துக் கட்சி கூட்டம் அவசியமில்லை என கூறிய அவர், மக்கள் நலன் கருதி தொகுதி மறுவரைவு மசோதா குறித்து திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.