சமூக வலைதளத்தில் விரிக்கப்பட்ட ‘ஹனி டிராப்’ காதல் வலையில் சிக்கி, ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக கூறி 44 வயது இந்திய விமானப்படை விங் கமாண்டரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவுத்துறை வலையமைப்பு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை விவரப்படி, கடந்த ஏப்ரலில் சமூக வலைதளம் வழியாக ஒரு பெண் அந்த அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். முதலில் நண்பராக பழகி, பின்னர் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டு, இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண் கேட்டதன் பேரில் விமானப்படை நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அவர் அனுப்பியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் முக்கிய ராணுவ தகவல்கள் மற்றும் ஆவணங்களும் பகிரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாரியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து விமானப்படை உயரதிகாரிகள் உள்நிலை விசாரணை நடத்தி, பின்னர் டில்லி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து மே 30 அன்று விங் கமாண்டர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ‘அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம்’ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கடந்த மாதம் 7 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சம்பவ விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

டில்லி போலீசார் கூறுகையில், கைப்பற்றப்பட்ட மொபைல் போன் ஆய்வில் அந்த பெண் பாக். உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து தகவல்களை அவர்களுக்கு அனுப்பியிருக்கலாம் என்பது உறுதியானதாக தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில், தன்னுடன் பணியாற்றும் மற்றொரு அதிகாரியின் போனில் ரகசிய செயலி ஒன்றை நிறுவியதாகவும், அது தரவு திருடவும் இருப்பிடத்தை கண்காணிக்கவும் பயன்படும் ‘ஸ்பைவேர்’ ஆக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். கைதான அதிகாரி மற்றும் அந்த பெண் குறித்த விவரங்கள், பகிரப்பட்ட ஆவணங்களின் தன்மை ஆகியவற்றை போலீசார் வெளியிடவில்லை; பாகிஸ்தான் தொடர்பு தெரிய வந்ததைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.