இந்தியாவில் 2028க்குள் மின்சார ஏர் டாக்சிகளை வணிக ரீதியில் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பெங்களூருவில் தெரிவித்தார். ஹெலிகாப்டர் போல செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில், பேட்டரி மூலம் இயங்கும் விமானங்களாக இவை உருவாக்கப்படுகின்றன.
பெங்களூருவில் சர்லா ஏவியேஷன் நிறுவனத்தின் புதிய தலைமையகத் திறப்பு விழாவில் பேசிய அவர், இந்த தொழில்நுட்பத்தின் சோதனைகளை இந்தியா வேகப்படுத்தி வருவதாக கூறினார். அடுத்த ஆண்டு சோதனைகள் மேலும் தீவிரமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெங்களூரு, மும்பை, டில்லி போன்ற நெரிசல் மிகுந்த பெருநகரங்களில் மின்சார செங்குத்து புறப்பாடு-தரையிறக்கம் (eVTOL) விமானங்கள் புதிய போக்குவரத்து வாய்ப்பை உருவாக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். பெங்களூரு மட்டுமல்லாமல் மும்பை மற்றும் டில்லியிலும் இதற்கான தேவை அதிகம் இருக்கும் என்றார்.
அடுத்த ஆண்டு சர்லா ஏவியேஷன் நிறுவனம் ஏர் டாக்சி சோதனைகளை தொடங்கவுள்ளதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (DGCA) இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார். இந்த ஏர் டாக்சி ஒரு விமானியுடன் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது; செங்குத்தாக தூக்குவதற்கு ஆறு மின்சார மோட்டார்களும், முன்னோக்கிச் செலுத்த பின்புறத்தில் இன்னொன்றும் என மொத்தம் ஏழு மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பயணிகள் சேவைக்கு அப்பாற்பட்டு, வான்வழி ஆம்புலன்ஸ் மற்றும் சரக்குப் போக்குவரத்திலும் இதை பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.





