அமெரிக்காவுடன் இனி நேரடி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை; மத்தியஸ்தர்கள் வழியாக மட்டுமே தகவல் பரிமாற்றம் நடைபெறும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி தெரிவித்துள்ளார்.
டெஹ்ரானில் அவர் கூறியதாவது: அமெரிக்கா–ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் உருவாக்கி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் ஒப்பந்தத்தை மீறி நடைபெறும் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாத வரை அந்தச் சூழல் உருவாகாது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க மாட்டோம் என்றும் அராக்ஸி தெரிவித்தார்.
இதனிடையே, ஈரான் பார்லிமென்டின் துணை சபாநாயகர் ஹமித்ரெசா ஹாஜி பபேயி, ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உதவும் நாடுகள் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்ப முடியாது என்று எச்சரித்தார்.
மண்டல நிலவரத்தில், ஏமனின் மோகா துறைமுகம் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், சவுதி அரேபியாவின் ஜஜன் பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் கட்டமைப்பை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியதற்குப் பொறுப்பேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





