ஜார்க்கண்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் 16வது நாளை எட்டியுள்ளது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூலை 25 முதல் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா அரங்கில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு கிடைக்கவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை, அரசுடன் மீண்டும் பேச்சு நடத்துவது தொடர்பாக போராட்டக்காரர்களுக்குள் கருத்து வேறுபாடு உருவாகி, அது இரு பிரிவுகளுக்கிடையேயான மோதலாக மாறியது. இந்த மோதலின்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய பதற்றமான சூழலிலும், மாணவர் பிரதிநிதிகளுடன் ஆறாவது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும், பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.