தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தை மாநில அரசு கூட்டியதன் நோக்கம் என்ன, அதன் “பின்னணி” என்ன என்று தி.மு.க. துணை பொதுச்செயலர் கனிமொழி வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார்.
லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதே தெரியாத நிலையில், இவ்வாறு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறினார். 1971 மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்ய வேண்டும்; லோக்சபா, ராஜ்யசபாவில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதம் குறையக்கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள பிரதிநிதித்துவம் குறையாமல் தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அதை வரவேற்போம் என்றும், இதற்காக தி.மு.க. தொடர்ந்து போராடி வாதாடி வருவதாகவும் கனிமொழி கூறினார். பார்லிமென்டில் புதிய சட்ட மசோதா கொண்டு வர திட்டமிருந்தால் வழக்கமாக அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்து பேசுவார்கள்; ஆனால் மறுவரையறை மசோதாவில் திருத்தம் செய்யப் போகிறோம் என்று மத்திய அரசு தரப்பில் தி.மு.க.விடம் யாரும் பேசவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை கொண்டு வரும் வாய்ப்பு இல்லை என தி.மு.க.விடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்படியிருக்க எதற்காக இக்கூட்டம், இதன் பின்னணியில் யார், மாநில அரசை யார் இயக்குகிறார்கள் என்ற கேள்விகள் எழுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், அனைத்து கட்சி கூட்டம் அல்லது எம்.பி.க்கள் கூட்டம் என்றால் அரசியல் கட்சித் தலைவர்களுக்கே கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாகவும், அதை பின்பற்றாமல் தலைமைச் செயலர் சாய்குமார் ஒவ்வொரு எம்.பி.க்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்தால் பார்லிமென்டில் பேச நேரம் குறையும் என்ற வாதத்தையும் அவர் மறுத்தார்; கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தே பேச நேரம் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.





