பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9) நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.
தன் பதிவில், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நினைவுகூருவதாகவும், அவர்களின் துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஒரு உத்வேகமாகத் திகழும் என்றும் மோடி குறிப்பிட்டார். காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ முழக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட மக்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றாக ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் கருதப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
1942 ஆகஸ்ட் 8 அன்று மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த சுதந்திரப் போராளிகளை நினைவுகூர்ந்து தலைவணங்கினார். ‘ஆகஸ்ட் புரட்சி’ நாளான இது, தேச நலனை முதன்மைப்படுத்தவும், சுதேசியை ஏற்றுக்கொள்ளவும், சுயசார்பு இந்தியாவை உருவாக்கவும், வளர்ந்த இந்தியாவை அடையவும் ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.





