புதுடில்லி: பார்லிமென்ட் நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியுள்ள சூழலில், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அணியைச் சேர்ந்த 8 எம்பிக்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் லோக்சபா எம்பி சுப்ரியா சுலே உறுதிப்படுத்தினார்.

பிரதமரை சந்திக்க அதிகாரப்பூர்வமாக நேரம் கோரியுள்ளதாகவும், ஆகஸ்ட் 10 காலை 11 மணிக்கு பார்லிமென்ட் அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்றும் சுலே தெரிவித்தார். இரு அவைகளிலும் தொடரும் முட்டுக்கட்டையால், தங்கள் தொகுதிகளின் பல்வேறு பிரச்னைகளை சபையில் முன்வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்பான பல கோரிக்கைகள், தொகுதி நலன் சார்ந்த பிரச்னைகள் மற்றும் மாநிலத்தில் எம்பிக்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காதது போன்ற விவகாரங்கள் பேசப்பட உள்ளதாக சுலே கூறினார். மேலும், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது சரத் பவாரும் தானும் பிரதமரை சந்தித்து மகாராஷ்டிரா தொகுதி பிரச்னைகள், நீட் தேர்வு விவகாரம் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசியதை அவர் நினைவூட்டினார்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து கேள்வி எழுந்தபோது, மசோதா இன்னும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் கருத்து கூறுவது முன்கூட்டியதாக இருக்கும் என்றும், மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு கட்சி ஒருமித்த முடிவை எடுத்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து ஒவ்வொரு மசோதாவையும் அணுகும் என்றும் சுலே தெரிவித்தார்.

தேஜ கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு சரத் பவாரும் சுலேயும் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருப்பினும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக இக்கட்சியினர் செயல்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.