பழனி நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் மதுரை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அன்வர்தீன் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி விழுப்புரம் முருகதாஸ் (56), நிலத்தை வாங்கியதாக கூறப்படும் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாப்பன்குளம் வெள்ளைத்துரை (60), பழனி சேதுபதி (67) உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அன்வர்தீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜூலை 29 அன்று மதுரை மத்திய சிறையில் ரிமாண்ட் கைதிகளாக அடைக்கப்பட்டனர். அன்வர்தீன் பக்கவாத பாதிப்புடன் இருந்ததால், வீல் சேரில் சிறைக்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அன்வர்தீன் உட்பட நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி. மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்ததாக தகவல்.
மரணத்திற்கு முந்தைய மாலை, நான்கு பேரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடல் தகுதி சான்று பெற்ற பின் மீண்டும் சிறையில் அடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. அன்வர்தீன் சோர்வாக இருந்ததாலும் சர்க்கரை நோயாளி என்பதாலும் சிறை மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் இரவு 9 மணியளவில் உணவு எடுத்துக் கொண்டு, 9.45 மணிக்கு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த மதுரை முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு, சிறை காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.




