மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இடையே சமூக ஊடகத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில், பெண்களை மீண்டும் உரையாடலில் பங்கேற்கச் செய்யவும், அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை ராகுல் பேசினார். இதற்கு பதிலளித்த ரிஜிஜு, இது காங்கிரஸ் தரப்பிலிருந்து வந்த நேர்மறை செய்தி போல இருப்பதாகவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிபந்தனையின்றி ஆதரிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ராகுல் பதிலளிக்கையில், காங்கிரசின் முழு ஆதரவுடன் 2023-லேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். மூன்று ஆண்டுகள் கடந்தும் சட்டம் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்றும், அதை ஏன் தேவையில்லாமல் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

ரிஜிஜு விளக்கமளிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கணிசமான நேரம் எடுக்கும் என்பதால், மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது 2034 லோக்சபா தேர்தல் வரை தாமதமாகலாம் என்றார். 2029 தேர்தலிலிருந்தே அமல்படுத்த வேண்டுமெனில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் விரைவில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.