கடந்த மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் கிழக்கு வாசல் கோபுரத்தை இன்று மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் ஆட்சி காலத்தில் பணிகள் தீவிரமாக முடிக்கப்பட்டு தற்போது பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவில் நிலம் மோசடி தொடர்பாக கவனத்திற்கு வந்த உடனே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பான விவகாரத்தில், கடந்த ஆட்சிக்காலத்தில் பவர் மாற்றம் மற்றும் பல இடங்களில் பத்திரப்பதிவு முயற்சிகள் நடந்ததாக தகவல் கிடைத்ததும் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவில்களில் மொபைல் போன் அனுமதிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருப்பதாக நினைவூட்டிய அமைச்சர், சமூக வலைதளங்களில் கோவிலுக்குள் இருந்து, கருவறை பகுதிகளிலிருந்தும் வீடியோக்கள் வெளிவருவதை காண்கிறோம் என்றார். முதற்கட்டமாக கோவில்களில் பாதுகாப்பான மொபைல் கவுண்டர்கள் அமைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் வரும்போது கோவிலுக்கு வெளியே பேட்டி, வீடியோ எடுப்பதில் தடையில்லை; கோவிலுக்குள் சென்று வீடியோ எடுக்க வேண்டிய அவசியமில்லை என கூறிய அவர், மீடியா நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இரு கரம் கூப்பி அன்புடன் வேண்டுகோள் வைத்தார்.