‘வாடகை காதலன்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பரவும் புதிய வகை டேட்டிங் விளம்பரங்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை சைபர் குற்றவாளிகள் குறிவைக்கிறார்கள் என ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் தகவலின்படி, கவர்ச்சியான ஆண்களின் புகைப்படங்களை வைத்து “சலுகை விலையில் வாடகை காதலன் வேண்டுமா?” என விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. ஒரு மணி நேரம் காபி அருந்துவது, சினிமாவுக்கு செல்வது போன்றவற்றுக்கு வெவ்வேறு கட்டணங்கள் குறிப்பிடப்பட்டு, சில இடங்களில் ஆகஸ்ட் 1-ஐ முன்னிட்டு 50% தள்ளுபடி எனவும் பிரசாரம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இவ்வகை விளம்பரங்கள் சைபர் குற்றவாளிகளின் கைவரிசை என போலீஸ் தெரிவித்துள்ளது. ஆன்லைன் உரையாடல்களை நம்பி முன்பின் தெரியாதவர்களை நேரில் சந்திக்கச் சென்றால், காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படவும் சிக்க வைக்கப்படவும் வாய்ப்பு அதிகம் என எச்சரித்துள்ளனர்.
மேலும், அரட்டையின் போது தந்திரமாக சேகரிக்கப்படும் தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பானவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.
சிறுமிகள் தொடர்பாக பெற்றோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் சமூக ஊடகங்களில் என்ன பார்க்கிறார்கள், யாரிடம் பேசுகிறார்கள், வெளியே செல்லும்போது யாரைச் சந்திக்கிறார்கள் என்பவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பதிவுகள் தெரிந்தாலோ, யாரேனும் பாதிக்கப்பட்டாலோ, உடனடியாக 1930 என்ற இணையக் குற்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும் அல்லது cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.





