தெலுங்கானாவில் அரசு செயல்பாடுகளை கட்சி மேலிடம் அதிகமாக கட்டுப்படுத்த முயல்வதாகவும், அதற்காக “மாநில ஒருங்கிணைப்பு குழு” மூலம் கண்காணிப்பை வலுப்படுத்துவதாகவும் கூறப்படும் நிலையில், முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி கடுமையாக எதிர்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முரண்பாடு தீவிரமடைந்ததற்கு காரணமாக, யாதாத்ரி புவனகிரி மாவட்டம் யாதகிரிகுட்டாவில் உள்ள புதுப்பிக்கப்பட்ட நரசிம்ம சுவாமி கோவில் அறங்காவலர் குழுவில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவை முதல்வர் நியமித்தது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் மேலிடத்திடம் புகார் அளித்ததாகவும், அறநிலையத் துறை அமைச்சர் கொண்டா சுரேகாவும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அரசு நலத்திட்டங்கள் தொடர்பாக தங்களிடம் ஆலோசனை நடைபெறவில்லை என்று சில அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் குற்றம்சாட்டியதாக தகவல். இதன் பின்னணியில், கடந்த மாத இறுதியில் டில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது; இதில் தெலுங்கானா பொறுப்பாளர் மீனாட்சி நடராஜனும் பங்கேற்றார்.

அந்த கூட்டத்துக்குப் பிறகு தெலுங்கானா அரசின் மீது கூடுதல் கண்காணிப்பு விதிப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, மாநில தலைவர் மகேஷ் குமார் கவுட், மீனாட்சி நடராஜன் உள்ளிட்ட எட்டு பேர் அடங்கிய மாநில ஒருங்கிணைப்பு குழுவை மேலிடம் அமைத்ததாக தகவல். மேலும், மூத்த அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில துறைகளை முதல்வர் ஆய்வு செய்வதற்கு தடையும், அரசியல் சாராத நியமனங்களில் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீனாட்சி நடராஜன் ஹைதராபாதில் தங்கி கட்சியின் அன்றாட விவகாரங்களோடு சில நேரங்களில் அரசு விவகாரங்களிலும் கவனம் செலுத்துவதாக கூறப்படும் நிலையில், அதைப் பற்றி முதல்வர் அதிருப்தி கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைப்பு குழு “சூப்பர் அரசு” போல செயல்படக் கூடாது என்றும், இந்நிலை தொடர்ந்தால் 2028 சட்டசபை தேர்தலில் கட்சியின் வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் நெருக்கமானவர்களிடம் கூறியதாக குறிப்பிடப்படுகிறது.