புதுடில்லி: இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு நன்கொடைகள் மீது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (எப்.சி.ஆர்.ஏ.) தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் முன்னணி சட்ட நிபுணர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.

ரிபப்ளிக் டிவிக்கு அளித்த பேட்டியில், “எந்த நன்கொடையும் இலவசமாக வருவதில்லை; அதற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கும்” என்று அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் தவறான கருத்துகளைத் திணிக்கும் முயற்சிகளும், வளர்ச்சித் திசையைத் திசைதிருப்பும் செயல்களும் தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இறையாண்மை கொண்ட எந்த நாடும் வெளிநாட்டு நிதி வருகையை கண்காணிப்பின்றி அலட்சியமாக இருக்க முடியாது என்றும், பிற நாடுகள் காட்டும் தீவிரத்துடன் இந்தியாவும் அதே அளவில் செயல்பட வேண்டும் என்றும் சால்வே கூறினார்.

வெளிநாட்டுப் பணம் வருவது மட்டுமே பிரச்னையல்ல; அது வந்த பிறகு எந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் விவாதத்தைத் தவிர்ப்பது ஒரு நாகரிகமாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.