காசோலை திரும்பிய வழக்கில் நடிகரும் பா.ஜ. பிரமுகருமான சரத்குமாருக்கு சம்மன் அனுப்ப சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், செப்டம்பர் 10ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார், 2024ம் ஆண்டு தனது கட்சியை பா.ஜ.வுடன் இணைத்தார். தன் கடன்களை அடைப்பதற்காக பெற்றதாக கூறப்படும் கடன் தொடர்பாக இந்த புகார் எழுந்துள்ளது.

வழக்கு விவரங்களின்படி, சென்னையைச் சேர்ந்த என். ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் இருந்து சரத்குமார் 2025 ஏப்ரலில் ரூ.2 கோடி கடன் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை திருப்பிச் செலுத்த வழங்கப்பட்ட காசோலை, வங்கியில் போதிய இருப்பு இல்லாததால் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஸ்ரீகிருஷ்ணா சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ். ரவீந்திரன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்குப் பிறகு, சரத்குமாருக்கு சம்மன் அனுப்பி செப்டம்பர் 10ல் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.