மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான கொள்கையை உருவாக்குவது குறித்து மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணைப்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு/தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளில் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடிக்கும் டாக்டர்கள் ஓராண்டு கிராமப்புற சேவை செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், 2023 முதல் தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படித்த மாணவர்களுக்கும் இந்த நிபந்தனை நீட்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கிராமப்புற சேவை முடித்தால்தான் டாக்டராக பதிவு செய்ய முடியும் என்ற விதியும் அரசாணையில் இடம்பெற்றதாக மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களை அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் தனிப் பிரிவாகக் கருதி, அவர்களுக்கு கட்டாய கிராமப்புற பணியிலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

ஆனால் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே அமர்வு அந்த வாதத்தை ஏற்க மறுத்தது. மருத்துவ அறிவியல் நாட்டின் முக்கிய வளம் என்றும், மக்களின் தேவைக்கேற்ப அதை பயன்படுத்துவது மாநிலத்தின் உரிமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். விசாரணையில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேசிய அளவிலான ஒரே கொள்கை குறித்து உரிய அறிவுறுத்தல்களை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.