தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில்களில் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. கமிஷனர் வினய் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 1 முதல் அனைத்து முதுநிலை கோவில்களிலும் பக்தர்கள் மொபைல் போனை கோவில் வளாகத்திற்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாக தடை செய்யப்படுகிறது.

உத்தரவின் படி, “கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடை” என்ற வாசகத்துடன் அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவாயில் மற்றும் வெளியே பக்தர்கள் தெளிவாகக் காணும் இடங்களில் வைக்கப்பட வேண்டும். மேலும், ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் மொபைல் போன்களை பாதுகாப்பாக வைக்க, கோவில் நுழைவாயில் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகே பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்படும். இதில் மொபைலை ஒப்படைத்து ரூ.5 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

சில கோவில்களில் புகைப்படம், வீடியோ மற்றும் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர்வதால், கோவிலின் அமைதியான ஆன்மிக சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஏற்கனவே மொபைல் பயன்பாட்டுக்கு தடை இருந்தாலும், நடைமுறைப்படுத்தலில் கூடுதல் கடுமை தேவைப்படுவதாக அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளது.

மொபைல் ஒப்படைப்பு, பாதுகாப்பு மற்றும் மீண்டும் வழங்கும் பணிக்காக தேவையான பணியாளர்கள் அல்லது தன்னார்வலர்களை சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மேலும், கோவில் வளாகத்தில் மொபைல் பயன்பாடு, அனுமதியின்றி புகைப்படம்/வீடியோ எடுப்பதை கண்காணிக்க ஒப்பந்த அடிப்படையில் போதிய பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுப்போர் மீது காவல் துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் செய்தியாக வெளியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.