தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதற்காக சென்னையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை அவர் கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் முதல்வர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

அறிக்கையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவுக்கு எதிராக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட்டத்தில் வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் பாதிக்கப்படும் என்பதால், எம்பிக்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி எல்லை மாற்றங்களை கைவிட்டு தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும், மாநில உரிமையை நிலைநிறுத்த அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.