மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், த.வெ.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். தற்போதைய ஆட்சியில் ஊழல் செய்ய முடியாததால் இப்படிப் பழிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்றும் அவர் கூறினார்.

கோவை அருகே நீலாம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே போதைப் பழக்க கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவித்தார். ஒவ்வொரு கல்லூரியிலும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும், டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு துறையில் ஊழல் நடந்ததாகவும், தற்போது பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த ஆட்சியில் பணத்தால் எதையும் செய்ய முடியாது என்றும், அவதூறு மற்றும் ஆபாசங்களுக்கு இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.