புதுடில்லி: கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையின் முன்னாள் எம்.பி. என்ற அடையாளத்தை பெருமையாகக் கூறிக்கொள்வது சமீபத்தில் ராஜ்யசபாவில் நடந்த ஒரு விவாதத்தில் வெளிப்பட்டது.
சுங்கச்சாவடிகள் தொடர்பான கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார். நாடு முழுவதும் எம்.பி.க்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது, இந்த சலுகையை முன்னாள் எம்.பி.க்களுக்கும் வழங்க வேண்டும் என ஒரு உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அதற்கு, முன்னாள் எம்.பி.க்களுக்கும் விலக்கு அளித்தால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கட்கரி தெரிவித்தார்.
இதையடுத்து சபைத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், தானும் முன்னாள் எம்.பி. என்பதால் அந்த சலுகை அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டார். அதற்கு கட்கரி, தற்போது அவர் துணை ஜனாதிபதியும் சபைத் தலைவருமாக இருப்பதால், அவருக்கு அந்த சலுகை ஏற்கனவே உண்டு என்று பதிலளித்தார்.
இந்த உரையாடலுக்குப் பிறகு, துணை ஜனாதிபதியாகிய பின்னரும் கோவை மற்றும் முன்னாள் எம்.பி. என்ற அடையாளத்தின் மீது ராதாகிருஷ்ணனுக்கு உள்ள ஈர்ப்பு குறையவில்லை என தமிழக எம்.பி.க்கள் பேசிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.





