மதுரை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் ‘பயணி’ என்ற குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவு போக்குவரத்து பஸ்களில் பயணிப்போருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் அறிமுகமானதைத் தொடர்ந்து, முன்பு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பரவலாக செயல்பட்டு பயணிகளிடம் வரவேற்பைப் பெற்ற ‘அம்மா குடிநீர்’ திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2013ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா ‘அம்மா குடிநீர்’ திட்டத்தை தொடங்கினார். இதற்காக கும்மிடிப்பூண்டியில் 2.47 ஏக்கரில் ரூ.10.5 கோடி செலவில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, பஸ்ஸ்டாண்டுகளில் ஒரு லிட்டர் ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலை காரணமாக பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், ஒரு கட்டத்தில் தினசரி 2 லட்சம் லிட்டர் வரை விற்பனையானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இந்த சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உற்பத்தி 80,000 லிட்டர், பின்னர் 12,000 லிட்டர் என படிப்படியாக குறைந்தது. கொரோனா காலத்திற்குப் பிறகு உற்பத்தி முழுமையாக முடங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது ‘பயணி’ திட்டம் விரைவு பஸ்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே பயன் தரும் வகையில் இருப்பதால், முன்பு உற்பத்தி மற்றும் விற்பனை கட்டமைப்புடன் செயல்பட்ட ‘அம்மா குடிநீர்’ திட்டத்தை அரசு மீண்டும் தொடங்கி, பிற அரசு பஸ்களில் பயணிப்பவர்களுக்கும் ரூ.10க்கு குடிநீர் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.





