மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகத்தின் எதிர்ப்பை கண்டித்து, கர்நாடகா–தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் இன்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளன.

இதையடுத்து, கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்துக்கு சென்று, ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற உள்ள மாநிலம் தழுவிய முழு அடைப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அவர் கூறுகையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றும், கர்நாடகா திறந்து விடும் நீர் தமிழகத்தில் கடலில் கலப்பதால் நஷ்டம் கர்நாடகாவுக்கே ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி போன்ற அணைகள் கர்நாடக விவசாயிகளுக்காக கட்டப்பட்டவை என கூறிய அவர், மேகதாது திட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி தமிழக அரசை கண்டித்து இன்று மதியம் 12.30 மணிக்கு அத்திப்பள்ளியில் போராட்டம் நடைபெறும் என்றார்.

போராட்டம் நடைபெறும் நாளில் தமிழக வாகனங்களும் தமிழக மக்களும் கர்நாடகாவுக்கு வரக்கூடாது என அவர் எச்சரித்தார். போராட்டத்தின் போது தமிழக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படாமல் அத்திப்பள்ளி எல்லையில் நிறுத்தப்படும் என தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.