கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போலீசார் நடத்திய ஆவணச் சரிபார்ப்பு நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தினர் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒயிட்பீல்டு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பிரிவுகளில் இரு நாட்களாக “ஆப்பரேஷன் முக்தா” என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் சட்டவிரோத குடியேற்றத்தை கண்டறிய போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஒயிட்பீல்டில் 1,035 பேரின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 62 பேர் சட்டவிரோத குடியேற்றத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்ததாக கூறப்படுகிறது. எலக்ட்ரானிக் சிட்டியில் 1,909 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதில் 43 பேர் பிடிபட்டனர்.

இரு பகுதிகளிலும் மொத்தம் 2,944 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 105 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்திடம் (FRRO) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்; அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் நாடு கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.