சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில், உறவினருக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்பதற்காக சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தை பயன்படுத்தி சூனியம் வைக்கும் வகையில் பூஜை செய்ததாக கூறப்படும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிலாஸ்பூர் மாவட்டம் தேவரி பகுதியில் உள்ள சுடுகாட்டில், நேற்று முன்தினம் இரவு நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் மாந்திரீக சடங்கில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்த நிலையில், மூன்று பேர் தப்பியோடினர்.
பிடிபட்டவர் ரிஷிகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டார். சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார், புகைப்படங்களுடன் மீன், எலுமிச்சை, குங்குமம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட எஸ்.பி. ரஜ்னேஷ் சிங் கூறுகையில், கத்திக்குத்து வழக்கில் பிரியன்ஷூ போலே உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில் மற்றவர்களின் ஜாமின் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், கைது செய்யப்பட்டவர் தெரிவித்ததாக கூறினார். சமூக ஊடகங்களில் ஒரு மந்திரவாதி கூறிய ஆலோசனையை கேட்டே இந்த சடங்கில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மூன்று புகைப்படங்களில் ஒன்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவினதும், ஒன்று சிறையில் உள்ள பிரியன்ஷூ போலேவினதும், மற்றொன்று கத்திக்குத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரினதும் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய மூவரை தேடும் பணி தொடர்கிறது.





