சென்னையில் சனிக்கிழமை கனமழை தொடர்ந்ததால் பல பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாலை தொடங்கிய மழை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமாக பெய்தது.
இதன் தாக்கமாக மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் விமான இயக்கங்களில் தாமதம் ஏற்பட்டது. வருகை விமானங்கள் திட்டமிட்ட நேரத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தமான், டில்லி, கோவா, ஹைதராபாத், திருச்சி, கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானங்கள் தரையிறங்க அனுமதி கிடைக்கும் வரை வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமானதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரும் மீனம்பாக்கத்தில் தரையிறங்க முடியாமல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் தாம்பரம் விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து அவர் கார் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றார்.





