புதுடில்லி: கோட்பாட்டு இயற்பியல் சர்வதேச மையம் (ICTP) வழங்கும் 2026 ஆம் ஆண்டுக்கான டிராக் பதக்கம், இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது இயற்பியல் துறையில் உலகளவில் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

1985 முதல் வழங்கப்பட்டுவரும் இந்த பதக்கம், ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட உலகின் முன்னணி கோட்பாட்டு இயற்பியலாளர்களை முன்பே கவுரவித்துள்ளது. கோட்பாட்டு இயற்பியலில் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ICTP இந்த விருதை வழங்குகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான தேர்வில், ஐஐஎன்எஸ்ஏ சிறப்பு பேராசிரியரான தீபக் தார், புள்ளிவிபர எந்திரவியல் துறையில் செய்த முக்கிய பங்களிப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இயற்பியலாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

1951ல் உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் பிறந்த தீபக் தார், ஹிந்தி வழிக் கல்வியில் பயின்றவர். பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கான்பூரில் மேல்படிப்பை முடித்தார். அமெரிக்காவின் கால்டெக் நிறுவனத்தில் ரிச்சர்ட் பெய்ன்மேன் உதவித்தொகை பெற்று, ரிச்சர்ட் பெய்ன்மேனுடன் நேரடியாகப் பணியாற்றி 1978ல் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு இருந்தபோதிலும் இந்தியா திரும்பிய அவர், மும்பை டி.ஐ.எப்.ஆர். நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் ஐசர் புனேவில் சுமார் எட்டு ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்துள்ளார். போல்ட்ஸ்மேன் பதக்கம், பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளுடன், தற்போது டிராக் பதக்கமும் அவரது பட்டியலில் சேர்கிறது.