2035க்குள் இந்தியாவுக்கான சொந்த விண்வெளி நிலையத்தை விண்ணில் அமைக்கும் இலக்கில் இஸ்ரோ செயல்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மேலாண்மை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அவர் இதை கூறினார்.

அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் 300 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வேண்டும் என்ற இலக்கை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோவுக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனுடன், 2035க்குள் இந்தியா சொந்தமாகவே விண்வெளி நிலையம் அமைக்கும் நீண்டகால திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு முன்பாக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மனிதரில்லா சோதனை விண்கலம் இந்த ஆண்டிற்குள் ஏவப்படும் என்றும் நாராயணன் கூறினார். தொடக்கத்தில் பிற நாடுகளின் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை இந்தியா சார்ந்திருந்த நிலையில், தற்போது இந்திய ராக்கெட்டுகள் மூலம் வணிக ரீதியில் 36 நாடுகளைச் சேர்ந்த 434 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள சிறிய செயற்கைக்கோள் ஏவுதளத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை ரூ.986 கோடியில் இந்திய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகளை ‘இன்-ஸ்பேஸ்’ தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 2,233 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த இரண்டாவது ஏவுதளம், இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சிறிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படுகிறது; வணிக ரீதியிலான முதல் மூன்று ஏவுதல்கள் அல்லது ஓராண்டு வரை தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல், செயல்பாட்டு ஆதரவு மற்றும் பயிற்சிகளை இஸ்ரோ வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.