ராஞ்சியில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், திங்களன்று ஜார்க்கண்ட் சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர். தடுப்புகளை மீறி முன்னேறியதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஜூலை 25 முதல் ராஞ்சியில் நடைபெறும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 10 அன்று 17வது நாளை எட்டியது.
மாணவர்கள் சட்டசபையை நெருங்கிய நிலையில் சூழல் தீவிரமடைந்ததால், அவை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி தலைமையில் பாஜவினர் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பின்னர் மராண்டி உள்ளிட்ட பாஜ தலைவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
மேலும், தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் கியாங்டேவை சிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





