மதுரையில் ஓய்வுபெற்ற 82 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பை முழுமையாக ராணுவ வீரர்களுக்கான கொடிநாள் நிதிக்கு வழங்கும் வகையில் உயில் ஆவணத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

ஹார்விபட்டியைச் சேர்ந்த சுப்பையா, மாவட்ட கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணாவை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து, வங்கி வைப்பு தொகையாக உள்ள ரூ.30 லட்சம் மற்றும் வங்கி லாக்கரில் தனது பெயரில் உள்ள ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கப் பொருட்கள் தொடர்பான உயில் ஆவணங்களை வழங்கினார். கூடுதலாக ரூ.10 ஆயிரம் காசோலையும் அளித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமின்போது இந்த உயில் ஆவணம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

சுப்பையா நிருபர்களிடம் பேசுகையில், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் யாரும் இல்லாமல் தனியாக வாழ்வதாக கூறினார். சேமிப்பை பணமாக எடுத்துத் தர முயன்றபோது வங்கிகள் அனுமதிக்காததால், உயிலாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், சேமிப்பில் இருந்து வரும் மாதாந்திர வட்டித் தொகையையும் வழங்க திட்டமுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், 2013ஆம் ஆண்டு தனது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக எழுதிவைத்துள்ளதாக நினைவூட்டினார். இந்த உதவி ஆத்ம திருப்திக்காக செய்ததாகவும், மக்கள் தங்களின் சேமிப்பில் இருந்து ஒரு சிறு பகுதியையாவது ராணுவத்திற்காக ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.