புதுடில்லி: ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதால், லோக்சபா சுமூகமாக இயங்க அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
டில்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தடியடி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பேசிய ஓம் பிர்லா, மக்களின் குரல் அவையில் கேட்கப்பட வேண்டும் என்று கூறினார். கேள்வி நேரம் நடைபெற வேண்டும் என்றும், முக்கியமான மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆக்கப்பூர்வமான விவாதம், அர்த்தமுள்ள பங்கேற்பு மற்றும் பாராளுமன்றத்தின் உயரிய மரபுகளைப் பின்பற்றுதல் அவசியம் என குறிப்பிட்ட அவர், மக்கள் சார்ந்த பிரச்னைகள் விரிவாகவும் பயனுள்ளதாகவும் விவாதிக்கப்படுவதற்காக அவை நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மக்களின் பிரச்னைகளை காத்திருக்க வைக்கக் கூடாது; அவையில் விவாதித்து தீர்வு காண வேண்டும் என்றும், தயவு செய்து ஒத்துழைத்து லோக்சபா செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.





