சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்த அதே நேரத்தில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் கிறிஸ்துவ மதத் தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பில் பிஷப் சின்னப்பா, பால் தினகரன் உள்ளிட்ட 16 திருச்சபைகளைச் சேர்ந்த போதகர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

த.வெ.க.–காங்கிரஸ் கூட்டணி உருவான பின்னணியில், தி.மு.க. பா.ஜ. பக்கம் நகரத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வரும் நிலையில், சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தி.மு.க. ஆதரவாக நிற்கும் என ஸ்டாலின் தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.

திருச்சபை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, தொகுதி மறுவரையறை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி முதல்வர் விஜய் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களை ஒருங்கிணைத்துள்ள நிலையில், “வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026” விவகாரத்தை மையமாக வைத்து ஸ்டாலின் கிறிஸ்துவ மதத் தலைவர்களுடன் நேரடி தொடர்பை புதுப்பித்துள்ளார்.

அந்த மசோதாவை வாபஸ் பெறச் செய்வது அல்லது பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் நடவடிக்கையை தி.மு.க. எம்.பி.க்கள் மேற்கொள்வார்கள் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.