மதுரை: தமிழகத்தில் மலைகள், அருவிகள், ஆறுகள், கடற்கரைகள் போன்ற இயற்கை வளங்கள் இருந்தும், சாகச சுற்றுலாவை முழுமையாக வளர்த்தெடுக்க சுற்றுலாத்துறை போதிய கவனம் செலுத்தவில்லை என சுற்றுலா ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தாக்கத்தால் 2021-ல் மாநிலத்தின் மொத்த சுற்றுலா பயணியர் வருகை 11.53 கோடியாக குறைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். பின்னர் கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கியதையடுத்து சுற்றுலா படிப்படியாக மீண்டு, கடந்த ஆண்டு வருகை 36.29 கோடியாக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு பயணியர் வருகையும் 2021-ல் 57,622 என்ற அளவிலிருந்து கடந்த ஆண்டு 16.87 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வரும் பல வெளிநாட்டு பயணியர்கள் சைக்கிள் பயணம், மலையேற்றம், ஆற்றைக் கடப்பது போன்ற சாகச அனுபவங்களில் அதிக ஆர்வம் காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் இயற்கையை ரசிப்பதற்கான அடிப்படை வசதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், சாகச நடவடிக்கைகளுக்குத் தேவையான பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் போன்ற ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் சாகச அனுபவங்களுக்கு மக்கள் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களை அதிகம் சார்ந்துள்ளதாகவும் கூறினர்.
மேலும், மாநில பட்ஜெட்டில் மாநில அளவிலான உணவு கலைத்திருவிழாவுக்கு ரூ.20 கோடி, சூழல் சுற்றுலா இயக்கத் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், பயணியர்கள் அதிகம் விரும்பும் சாகச சுற்றுலாவுக்கான தனித்திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கொடைக்கானல், நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் கடலோர பகுதிகளிலும் மலையேற்றம், பாறை ஏறுதல், ஜிப் லைன், சைக்கிள் பயணம் போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், சாகச சுற்றுலா மையங்களை உருவாக்கினால் பயணியர் வருகை அதிகரித்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் கூறினர்.





