ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில், விவசாய நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணம் கறையான் அரித்த நிலையில் கிடைத்ததால் ஒரு விவசாயி கடும் மனவேதனையில் உள்ளார்.
பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தில் நிலத்தில் ஒரு அறை கட்ட திட்டமிட்ட அவர், மனைவிக்கு தெரியாமல் பணத்தை பாலிதின் கவரில் வைத்து குழி தோண்டி மண்ணில் புதைத்துள்ளார்.
குடிப்பழக்கம் காரணமாக பணம் புதைத்த இடத்தை அவர் மறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அறை கட்ட பணம் அவசரமாக தேவைப்பட்டபோது, நீண்ட நாட்கள் தேடியும் கிடைக்காமல், சுமார் 6 ஏக்கர் நிலத்தை தோண்டிப் பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.
பின்னர் இந்த விஷயத்தை மனைவி மற்றும் மகனிடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் நம்பாத அவர்கள், பின்னர் அவருடன் சேர்ந்து தேடத் தொடங்கினர். ஓராண்டு கழித்து மழை பெய்ததைத் தொடர்ந்து டிராக்டரால் நிலத்தை உழுதபோது, புதைத்திருந்த கட்டு கண்ணில் பட்டது; ஆனால் ரூ.500 நோட்டுகள் கறையான் அரித்த நிலையில் இருந்ததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கறையான் அரித்த நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு மாற்றக் கொண்டு சென்றபோது, வங்கி நிர்வாகம் மாற்ற மறுத்து ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பணம் திரும்பக் கிடைக்கும் நம்பிக்கை குறைந்ததால் குடும்பம் தவித்து வரும் நிலையில், நோட்டுகளை பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.





