திருப்பூர் மாநகராட்சியில் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்கு நகராட்சி நிர்வாகத் துறை திடீரென இடமாற்ற உத்தரவு பிறப்பித்தது, மாநகராட்சி வட்டாரத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உதவி கமிஷனராக பணியாற்றிய ராஜசேகர், முன்பு வருவாய் பிரிவு மேற்பார்வையாளராக இருந்தவர். 2023-ல் மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜ் சாலையிலுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகம் தொடர்பான விவகாரங்களில் புகார்கள் எழுந்தன.

ஏலம் எடுத்த அரவிந்த் சக்திவேலை மிரட்டி வெளியேற்றியது, அவர் கொடுத்தது போல போலி விலகல் கடிதம் தயாரித்தது, வைப்புத் தொகையை மாநகராட்சி கணக்கிலிருந்தே திருப்பி அனுப்பியது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ராஜசேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஒரு மாதமாகியும், அதற்கான அறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜசேகரை வேலூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் விவரத்தை உடனடியாக ஆணையருக்கு தெரிவித்து, அந்த இடமாற்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால், விவகாரம் மேலும் பேசுபொருளாகியுள்ளது.