காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தின் மனுவில், ஜூலை 29ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை செயல்படுத்த கர்நாடகா மறுத்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நீராண்டில் போதுமான நீர்வரத்து இருந்தபோதும், நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளும் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், பல காரணங்களை முன்வைத்து முழுமையாக நீர் திறக்காமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து ஆகஸ்ட் 12க்குள் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி. நீரை திறந்து, அது பிலிகுண்டுலு எல்லையை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி மேலாண்மை ஆணையம் நேரடியாக கண்காணித்து, பிலிகுண்டுலுவில் நீர்வரத்து உறுதி செய்ய தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.