சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டவர்கள், அதற்கான இடைத்தரகர்கள் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் என மொத்தம் 837 பேரை மாநிலம் முழுவதும் நடத்திய அதிரடி நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுதும் செயல்படும் சைபர் குற்ற வலையமைப்புகளை சீர்குலைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆன்லைன் மோசடிகளில் பறிக்கப்பட்ட பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றி மறைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் கணக்குகள் “மியூல்” வங்கி கணக்குகள் என போலீசார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய கணக்குகளை கமிஷன் அடிப்படையில் ஏற்பாடு செய்து தரும் இடைத்தரகர்கள் இருப்பதுடன், சிலர் நேரடியாக தங்களின் கணக்குகளை வாடகைக்கு விட்டும் பணம் பெறுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், நாடு முழுவதும் பதிவான 9,804 சைபர் குற்ற வழக்குகள் தொடர்பாக, ரூ.545 கோடி மோசடி செய்யப்பட்டதாகவும், அந்த பண பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழகமெங்கும் போலீஸ் நிலைய அதிகாரிகள், கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையில் 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 837 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுதல் தொடர்பாக கூடுதலாக 150 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

கைதானவர்களிடமிருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், ரூ.1.02 லட்சம் ரொக்கம், 114 வங்கி புத்தகங்கள், 29 காசோலைகள், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 155 மொபைல் எண்கள் விவரங்கள், 58 வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் 73 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, நாடு முழுதும் உள்ள கூட்டாளிகளை கண்டறியும் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.