சென்னை: தமிழகத்தில் பிறப்பு விகிதமும் கருவுறுதல் விகிதமும் குறைந்து வருவதாகக் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், தம்பதியர் அதிக குழந்தைகள் பெற ஊக்குவிக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் தென்னிந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ சங்கம் நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கூறினார். 2017–18 நிதியாண்டில் 65.8% இருந்த பிறப்பு விகிதம் தற்போது 51% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில் பிறப்பை அதிகரிக்க “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1 இலிருந்து 1.4 ஆக குறைந்திருப்பதாக தகவல்கள் வருவதாகவும், சமூகம் மெதுவாக முதுமை அடைந்து வருவதாகவும் கூறினார். 66 வயதுக்கு மேல் 16% பேர் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய அரசுகளின் திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், நல்ல திட்டங்கள் எந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என்றார். மூன்று தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலை அந்தஸ்து பெற்றது தொடர்பாக சட்டசபையில் விரிவாக பேசுவதாகவும் தெரிவித்தார்.
மருத்துவ கல்வி தொடர்பாக, கடந்த ஆட்சியின் தவறால் மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறிய அமைச்சர், தற்போது மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 50 இடங்களை அரசு பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களை மீண்டும் விசாரிக்க புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்; இதில் சமரசம் இல்லை என்றும் கூறினார்.





