அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கட்சித் தலைமைக்கு எதிராக அவர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது இதற்குக் காரணமாக குறிப்பிடப்படுகிறது.

தகவலின்படி, சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் அதிருப்தி அணியொன்று செயல்பட்டு வருகிறது. வேலுமணி நேரடியாக பழனிசாமியை விமர்சிக்காமல், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும், அதே நேரத்தில் சண்முகம் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், வேலுமணி, தங்கமணி, விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், சண்முகத்திற்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், சண்முகத்தை ஆதரிக்கும் நிர்வாகிகளும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், சண்முகத்தை கட்சியில் இருந்து நீக்கலாமா அல்லது ‘சஸ்பெண்ட்’ செய்யலாமா என பழனிசாமி ஆலோசித்து வருவதாக, சில எம்.எல்.ஏ.க்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில் தன்னை எதிர்ப்பவர்களை நீக்கி கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி நடப்பதாகவும், சண்முகம் மீது நடவடிக்கை எடுக்காததால் தலைமை ஆளுமை குறித்து ஆதரவாளர்களிடம் சந்தேகம் எழுந்ததாகவும் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ‘நீக்கலாம்’ என கருத்து தெரிவித்ததாகவும், ஆனால் சில மூத்த தலைவர்கள் நீக்கம் செய்தால் அவர் த.வெ.க. அரசுக்கு நேரடியாக ஆதரவு அளிக்கக்கூடும்; கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற வேலுமணியின் நிலைப்பாட்டை சண்முகம் ஏற்காததால் இருவருக்கிடையே முரண்பாடு பெருக வாய்ப்பு இருப்பதாகக் கூறி, அதுவரை பொறுமையாக இருக்க ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.