திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் மீண்டும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில் சிவன், விநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 26 அன்று இச்சிலைகள் முதன்முறையாக சேதப்படுத்தப்பட்டதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், முன் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என ஹிந்து முன்னணி குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் இருந்த சிலைகள் மற்றும் மயில் வாகனம் உள்ளிட்டவை நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல் முறையே போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவம் மீண்டும் நடந்திருக்காது என ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் தெரிவித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அப்பகுதியில் உள்ள வழிபாட்டு இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





