கோவை: இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி உலக நாடுகளுக்கு “சிம்ம சொப்பனமாக” இருப்பதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாடு சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் ராம்ராஜ் காட்டன் சார்பில் ஈச்சனாரி ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடைபெற்ற ‘கோவை சுதேசி எக்ஸ்போ மற்றும் உணவுத்திருவிழா’ நிறைவு நாளில் அவர் பேசினார்.
அந்நிகழ்ச்சியில் மேஜர் மதன்குமார் எழுதிய ஆப்பரேஷன் சிந்தூர் நூலை அண்ணாமலை வெளியிட்டார். இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என்றும், நாட்டிற்காக உயிரை துச்சமாகக் கருதி செயல்பட்ட கமாண்டோ வீரர் பிரபாகரனை நினைக்கும் போது பெருமையும் நெகிழ்ச்சியும் ஏற்படுவதாகவும் கூறினார்.
மேஜர் முகுந்த் மறைந்தாலும் அமரன் திரைப்படம் மூலம் அவரது பெயரும் கதையும் பல இடங்களுக்கு சென்றடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த காலத்தில் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த தகவல்களைவிட, மேஜர் மதன்குமார் தனது யூடியூப் சேனலில் அளித்த விளக்கங்கள் பொதுமக்களுக்கு தெளிவாகப் புரிய உதவியதாகவும் தெரிவித்தார்.
ஒருகாலத்தில் பொருளாதார வலிமை குறைந்திருந்த இந்தியா, இன்று ஆப்பரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக அண்ணாமலை கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாகிஸ்தானை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், எதிரிகளுக்கு ரூ.14,500 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதோடு, தேசப்பற்று போன்ற முக்கிய விஷயங்களில் உறுதியாக நிற்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.





