டமாஸ்கஸில் உள்ள சிரியா சிவில் நீதிமன்றம், முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை விதித்துள்ளது.

ஆசாத் குடும்பம் 54 ஆண்டுகளாக சிரியாவை ஆட்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 முதல் 2024 வரை பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்த காலத்தில், எதிர்ப்புகளை கடுமையாக அடக்கி அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

2011-ல் உள்நாட்டு போர் வெடித்து, 2024-ல் மீண்டும் தீவிரமடைந்தது. அதே ஆண்டில் எதிர்ப்புப் படைகள் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியதைத் தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் குடும்பத்துடன் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் கிளர்ச்சிப் படையின் அகமது அல் ஷாரா அதிபராக பதவியேற்றார்.

போரின் போது லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகக் கூறி, பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போர் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதே வழக்கில், சிரியா ராணுவத்தில் பணியாற்றிய அவரது சகோதரர் மஹர் அல் ஆசாத்துக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும், ஆசாத் ஆட்சிக் காலத்தில் டாரா மாகாண அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருந்த உறவினர் அடேப் நஜிப்க்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை திட்டமிட்டு கொன்றதும், கொல்லும் நோக்கில் கொடுமைப்படுத்தியதும் என அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.