புதுடில்லியில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பிறகு, அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி வீதம் தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் (CMA) உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) 139வது கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் கேரளா, புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான 45.5 டிஎம்சி நீரையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள காவிரி நீரையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, அடுத்த 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்று CWRC பரிந்துரை செய்தது.
CWRC கூட்டம் முடிந்த பின்னர், தலைவர் ஹல்தார் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 55வது கூட்டம் நடைபெற்றது. அங்கு பரிந்துரையை ஏற்று, நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி வீதம் மொத்தம் 15 நாட்களுக்கு 15 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.





