கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி, இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் உணரப்பட்டது.
சோகோ மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ்டெல் பால்மருக்கு கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், 107 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் பதிவானதாக கூறப்படுகிறது. இதனால் பல கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கி, அச்சமடைந்த ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர்.
இதுவரை குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் கூறினர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொலம்பியாவைத் தாண்டி வெனிசுலா எல்லைப் பகுதிகளிலும் ஈக்குவெடாரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





