சென்னையில் லோக்சபா தொகுதி மறு வரையறை விவகாரத்தை முன்வைத்து திமுகவும் காங்கிரஸும் ஒருவரை ஒருவர் கேள்விக்குள்ளாக்கும் வகையில் கடுமையான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டன.
திமுக எம்.பி. தயாநிதி, “தமிழகத்தில் மட்டும் தொகுதி மறு வரையறை வேண்டாம்” என்ற நிலைப்பாடு ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், தொகுதி மறு வரையறை நடந்தால் தெலுங்கானாவின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்று பேசியதாகக் கூறி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை காங்கிரஸ் கேள்வி கேட்குமா என்றும் சவால் விடுத்தார்.
தமிழக எம்.பி.க்கள் கூட்டம் நடத்தி தொகுதி மறு வரையறைக்கு எதிராக “நாடகம்” நடத்தப்படுகிறதா எனவும், “நியாயமான மறு வரையறை” என்ற நிலைப்பாட்டிலிருந்து “மறு வரையறை வேண்டாம்” என மாறியது தமிழகத்திற்கே மட்டுமா அல்லது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா எனவும் அவர் கேள்வியெழுப்பினார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற எம்.பி.க்கள் கூட்டம் ஏன் நடத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ரேவந்த் ரெட்டி முன்வைத்தது பா.ஜ.க. வின் மக்கள்தொகை அடிப்படையிலான மறு வரையறை அல்ல என்று தெரிவித்தார். குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்கள் தங்களின் பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்பதே தங்களின் கவலை என்றும் கூறினார்.
மேலும், மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய அவர், வட மாநிலங்களுக்கு சாதகமாகவும் தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் அமையும் ஒருதலைபட்ச மக்கள்தொகை அடிப்படையிலான மறு வரையறையை காங்கிரஸ் எதிர்க்கிறது என்று தெரிவித்தார்.




