சென்னை மாநிலக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற மாநில அளவிலான இயக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
முதல்வர் வருகையின்போது காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, அதைத் தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
மேலும் போதைப்பொருள் விழிப்புணர்வு காணொளி ஒளிபரப்பப்பட்டது. போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க சிறப்பாக பணியாற்றிய 15 காவல் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காவல்துறையினர் பறிமுதல் செய்த போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கையும் முதல்வர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அழிப்பு பணிகளை முதல்வர் விஜய் காணொலி வழியாகக் கண்டுகளித்தார்.





