நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாக கூறப்படும் நியமன முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் முன்னாள் அமைச்சர் நேருவை “பாதுகாத்தது” என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் உதவி இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு நடந்த நியமனங்களில் ரூ.634 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நியமன முறைகேடு குறித்து ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியிருந்தும், முந்தைய ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாதிட்டார். மேலும், இன்பதுரை வழக்கில் தீர்ப்பு ஒதுக்கி வைக்கப்பட்டு 16 நாட்களுக்கு பின் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டு, தீர்ப்புக்காக காத்திருந்து விட்டு “தன் தரப்பு விளக்கம் கேட்கவில்லை” என்ற உரிமையை நேரு தரப்பு முன்வைக்க முடியாது என்றும் கூறினார்.

நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லூத்ரா மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, நேரு தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதால் உரிமை பாதிக்கப்பட்டதாக வாதிட்டனர். மேலும், வழக்குப்பதிவு உத்தரவை மறுஆய்வு செய்ய முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது; அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை மறுஆய்வு செய்யக் கோரி நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒதுக்கி வைத்தனர்.