நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மாணவர் போராட்டங்களின் பின்னணியில், மத்திய கல்வி அமைச்சகத்தில் மீண்டும் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஜூலை 23 அன்று உயர்கல்விச் செயலாளராக பணியாற்றிய வினீத் ஜோஷி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டார். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அழுத்தம் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கங்வார் வெறும் 17 நாட்களிலேயே அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி புதிய உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கங்வாரின் குடும்பத்தினர் அரசு திட்டத்தின் கீழ் மானியம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளின் பின்னணியில் இந்த மாற்றம் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1993 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி, இதற்கு முன்பு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், மத்திய அரசின் பல முக்கிய துறைகளில் உயர்பதவிகளை வகித்ததுடன், தேசிய சுகாதார ஆணையத்திலும் முக்கிய பொறுப்புகளை ஏற்றிருந்தார்.