புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் ஆகஸ்ட் 11 அன்று லோக்சபாவில் மீண்டும் அமளி ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை முடங்கின.

முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடைபெறவும், அவை இடையூறு இன்றி செயல்படவும் அரசும் எதிர்க்கட்சியும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.

டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவை தடையின்றி செயல்பட்டால், எதிர்க்கட்சிகள் எழுப்பிய பிற பிரச்னைகளையும் விவாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், அவைக்குள் பதாகைகள் காட்டுவது பார்லிமென்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது என நினைவூட்டினார்.

கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது என்றும், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதியாகும் வகையில் அது உதவுகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மக்கள் பார்லிமென்டில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறுவதை காண விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.