பெங்களூரு: மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து, கர்நாடக–தமிழக எல்லையிலுள்ள அத்திப்பள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாட்டாள் நாகராஜ் உட்பட 65 பேரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

கன்னட சலுவளி வாட்டாள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் தமிழகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தடுத்து காவலில் எடுத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஓசூர்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 10 மணியிலிருந்து பெங்களூரு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும், போராட்டம் முடிந்த பின் போக்குவரத்து சீரானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் பேசிய வாட்டாள் நாகராஜ், மேகதாது அணை கட்ட வலியுறுத்தி வரும் 13ஆம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறினார். தமிழகத்தில் மேகதாது திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், கர்நாடக–தமிழக எல்லையை நிரந்தரமாக மூடும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், கர்நாடகாவில் தமிழ் படங்களை திரையிட முழுமையான தடை விதிக்க நேரிடலாம் என்றும், கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் மேகதாது திட்டத்திற்கு எதிர்க்க வேண்டாம் என தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் அவர் கூறினார். இல்லையெனில் சென்னை தலைமைச் செயலகம் முன் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி சத்தியாகிரக போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.