சுதந்திர தினத்தன்று நாட்டுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த அழைப்பு, மத்திய கலாசார அமைச்சகம் 2022-ல் தொடங்கிய ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்துடன் தொடர்புடையது. அந்த இயக்கம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

வரும் ஆகஸ்ட் 15 கொண்டாட்டங்களை முன்னிட்டு, வீட்டில் கொடியை ஏற்றி Harghartiranga.com இணையதளத்தில் பதிவேற்றுமாறு மத்திய கலாசார அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இதையே பிரதமரும் தனது பதிவில் மீண்டும் வலியுறுத்தினார்.

வீடியோவில், ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் பெருமை மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வகையிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.